பட்டை தலை வாத்துகள்
இந்த ஆண்டு (2015) எனக்கு பறவை நோக்கலை பொறுத்தவரையுலும் அதிர்ஷ்டமான வருடம் என்றுதான் சொல்ல வேண்டும். வலசை வரும்,பறவைகளான சாவ்லர் , பின்டைல், கர்காணி போன்ற பறவைகளுடன் காமன் டீல், காட்டன் டீல், லெசெர் விசிலிங் டக், போன்ற வகை வாத்துகளை முதல் முறையாக புகைப்படம் எடுக்க முடிந்தது மட்டுமல்லாது மறந்திருந்த அடையாளங்களை மறுபடியும் ஞாபக படுத்தி பார்க்க முடிந்ததில் ஒரு சந்தோஷமே!
எப்பொழுதோ எங்கோ ஒரு முறையே பார்த்திருந்த காட்டன் டீல் போன்ற பறவைகளை குறிச்சி குளத்திலும், பேரூர் குளத்திலும் எண்ணற்ற கணக்கில் பார்த்து பரவசப் பட்டேன். அதே மாதிரி லெசர் விசிலிங் டக் பேரூர் குளத்தில் பல முறை அதிக எண்ணிக்கையில் பார்த்ததும் அதை புகைப்படம் எடுக்கமுடிந்ததிலும் கிடைத்த இன்பமே அலாதிதான்.
குளிர் காலத்தில் வலசை வரும் பறவைகளில் ஒன்று பார் ஹெடெட் கூஸ் (BAR HEADED GOOSE ) அல்லது பட்டை தலை / நீர் வாத்து .இது மிகவும் நீண்ட தூரத்தில் இருந்து வரும் பெரிய பறவையாகும். இமய மலையை கடந்து வருவதாக நம்பப் படுகின்றது. மிகவும் உயரமாகவும் பறக்கக் கூடியது மட்டுமில்லாது குறைந்த அளவே பிராண வாயு உள்ள வளி மண்டலத்தில் பறக்க கூடிய வகையில் அதன் சுவாசிக்கும் திறன் / நுரையீரல் மாற்றமடைந்து பல ஆயிரம் கிலோ மீட்டர் பறந்து வலசை வருகின்றது. இது பொதுவாக தாவர உணவுகளே உட்கொள்ளும் . பிற்பகல் மற்றும் இரவு வேளைகளில் நீர்நிலைகளின் அருகிருக்கும் வயல் வெளிகளில் மேயும். பின்னர் நீர் நடுவேயுள்ள திட்டுகளிலும் கரை ஓரங்களிலும் ஓய்வு எடுக்கும்.
பொதுவாக வட இந்திய பகுதிகளில் வலசை வந்து திரும்பும் இப்பறவை தமிழ் நாட்டுக்கும் வருவது அதிசயம்தான். அதிலும் திருப்பூர் அருகிலுள்ள நஞ்சராயன் குட்டைக்கு இப்பறவைகள் வலசை வருகின்றன. 20-30 பறவைகள் திருப்பூர் வந்து செல்கின்றன. இம்முறை வலசை வருவது சந்தேகமே என்று பறவை ஆர்வலர்கள் நினைத்தார்கள். ஏனென்றால் போன வருடம் குளத்தில் உள்ள மரங்கள் முழுவதையும் அரசு இயந்திரங்கள் காசு பார்ப்பதற்காக வெட்டி விட்டனர்.மொட்டை குளத்திற்கு பறவைகள் வருவது சந்தேகமே என்று இருந்த நேரத்தில் LATE ஆக வந்தாலும் LATEST ஆக வருவேன் என்று 30-40 பட்டை தலை வாத்துகள் வந்துள்ளன.
நான் சென்ற பொழுது நீரெல்லாம் குறைந்து சாக்கடையாக குளம் இருந்தது. வடக்கிலிருந்து இமயம் தாண்டி வரும் விருந்தாளிகளை இப்படியா வரவேற்பது? நம் நீர்நிலைகளின் தரம் மிகவும் மோசம். ஏற்கனவே குறைந்து வரும் பறவைகளின் எண்ணிக்கை இம்மாதிரி நீர் நிலைகளினால் இன்னமும் அழியும்.
சென்னை மழை சம்பவத்துக்கு பின்னராவது நம் நீர் நிலைகளை காக்கும் எண்ணம் சிறிதாவது வந்தால் பரவாயில்லை. பல ஆயிரம் வருடங்களாக நடக்கும் வலசை வரும் விநோதமானது நம் தலை முறையால் அழியக்கூடாது. அது மட்டுமில்லாது தூய நீர்நிலைகள் நமது சொத்துக்கள். நம் பண்பாட்டை பறை சாற்றுபவை. மனிதனின் சுய நலத்திற்காக சுரண்ட படக்கூடாது. நீர்நிலைகள் குடி நீர் தேவைக்கும் விவசாயத்திற்கும் மிகவும் அத்தியாவசியமானவை. பறவைகளினால் நீர் நிலைகள் ஊட்டம் பெறுகின்றன. கால்சியம் மற்றும் நைட்ரஜன் எருக்கள் வலசை வரும் பறவைகளின் எச்சங்களினால் கிடைகின்றது. விவசாயத்திற்கு எதிரியான பல வகை பூச்சிகளின் எண்ணிக்கை பறவைகளினால் கட்டுப் படுகின்றன. ஆகையால் நீர்நிலைகளை காத்து, வலசை வரும் நண்பர்களையும் வரவேற்போம்.
பட்டை தலை வாத்துகள்
விசிலிங் வாத்துகள்
காட்டன் டீல்
No comments:
Post a Comment